ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Published on

மேலும் கிழக்கு ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. பெரும்பாலான சர்வதேச நாடுகள் இதனை அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையில் கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் தனது தலைநகராக அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் தங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பாலஸ்தீனர்கள் கிழக்கு ஜெருசலேம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலஸ்தீனர்களின் இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிர தேசியவாத யூதர்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணி பாலஸ்தீனர்களின் போராட்டம் நடந்த பகுதிக்கு வந்த போது இரு தரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது.

இருதரப்பினரும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி எறிந்து ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசாரையும் சரமாரியாக தாக்கினர்.

இந்த வன்முறையால் கிழக்கு ஜெருசலேம் நகரமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் 20-க்கும் அதிகமான போலீஸ்காரர்களும் படுகாயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com