ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும்: உலக சுகாதார அமைப்பு

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும்: உலக சுகாதார அமைப்பு
Published on

ஸ்டாக்ஹோம்,

குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்பட கூடிய தொற்று நோய் ஆகும். ஆப்பிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்த புது வடிவிலான வைரசானது, காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று சமீபத்தில் கூறினார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக சுவீடன் நாட்டில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வைரசானது, கிளாட் 1 என்ற வகையை சேர்ந்தது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டலத்திற்கான அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சுவீடனில் கிளாட் 1 வைரசின் பரவலானது, நம்முடைய உலகில் ஒன்றோடொன்று நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.

வருகிற நாட்களில் மற்றும் வாரங்களில் ஐரோப்பிய பகுதிகளில் கிளாட் 1 பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com