ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க நடவடிக்கை - அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை திரும்பியதும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேச இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க நடவடிக்கை - அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
Published on

வாஷிங்டன்,

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஹில்டன் ஓட்டலில் ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ரேணு கத்தார், ஹூஸ்டன் பெருநகர பார்ட்டனர் ஷிப் மிஸ் சூசன் டேவன் போர்ட் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கத்தார், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.

அதற்கு ஓ.பன்னீர்செல்வம், தமிழகம் திரும்பியதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து ஆலோசித்து தமிழ் இருக்கை அமைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். மேலும் தன் சொந்த பங்காக 10 ஆயிரம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 லட்சம்) வழங்குவதாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கும் முயற்சி மிகவும் சரியான நேரத்தில் பொருத்தமான முடிவாக அமைந்திருக்கிறது. ஹர்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு ரூ.10 கோடி வழங்கியதையும், சிகாகோவில் நடைபெற்ற 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூ.1 கோடி வழங்கப்பட்டதையும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற 4-வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு அரசின் நிதியுதவியாக ரூ.17 லட்சம் வழங்கப்பட்டதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அந்த வகையில் தமிழ் மொழி இப்பகுதியில் வளர்ச்சி காண ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய இருப்பதை கண்டு பெரும் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகிறேன். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் ஆய்வு இருக்கைக்கு தமிழக அரசும் நன்கொடை அளித்திட வேண்டும் என்று உங்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை நான் உணர்ந்திருக்கிறேன். நிச்சயம் தமிழக அரசின் உதவி கிடைப்பதற்கு ஆவண செய்வேன்.

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிற்கும், அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஹூஸ்டன் பெருநகரம் டெக்சாஸ் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கான மிகப்பெரிய வளர்ச்சி எஞ்சின். ஆகவே இங்குள்ளவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். அதே போல் நாங்களும் இந்த நகரில் பயனுள்ள வகையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நல்கிட முடியும் என்று கருதுகிறேன். அந்த பரஸ்பர ஒத்துழைப்பை எதிர்பார்த்து, இங்குள்ள தொழில் முனைவோர் குழு முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று நான் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இந்திய தூதரக அதிகாரி (பொறுப்பு) ராகேஷ் பனாட்டி, தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், ஹூஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்கரோவ், உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் விஜயபிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com