மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார் டிரம்ப்

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதியை பெற ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளார்.
மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார் டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் நுழைவதை தடுக்கும் விதமாக மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப உள்நாட்டு நிதியில் 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் செலவின மசோதா நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக பல்வேறு அரசுத்துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கின.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் முடிவில் டிரம்ப் தீர்க்கமாக உள்ளார். இதனால் அங்கு மீண்டும் அரசுத்துறைகள் முடக்கம் வரலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

இந்த நிலையில் மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை பெறுவதற்காக டிரம்ப், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் முன்பு கூறியது போல எல்லைச் சுவர் எழுப்புவதற்கு தேவைப்படுவதற்கான நிதி மசோதாவில் கையெழுத்திட உள்ளார். இதற்காக அவர் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்துகிறார். இந்த சுவரின் மூலம் நமது நாடு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்து இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் அறிக்கை வெளியான சில மணி நிமிடங்களில் குடியரசு கட்சியை சேர்ந்த செனட்சபை பெரும்பான்மை குழுவின் தலைவர் மெக்கோனெல் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நான் ஜனாதிபதி டிரம்புடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதியை பெற அவர் அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளதாக கூறினார். அவரது இந்த முடிவை நான் ஆதரிக்கிறேன் என்றார்.

மேலும் அவர், டிரம்பின் முடிவு குறித்து நாடாளுமன்றத்தின் பிற உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தினேன். ஜனநாயக கட்சியினர் இதனை சுப்ரீம் கோர்ட்டு மூலம் எதிர்கொள்வதாக சொல்கிறார்கள். நாங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கிறோம். ஜனாதிபதி தனது பணியை செய்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதையே செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அவசர நிலையை பிரகடனப்படுத்தும் டிரம்பின் முடிவுக்கு ஜனநாயக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி மற்றும் செனட்சபை சிறுபான்மை குழு தலைவர் சக் சும்மர் ஆகிய இருவரும் இது சட்டத்துக்கு புறம்பான செயல் என கூறினர்.

மேலும் டிரம்பின் முடிவை சட்டரீதியில் எதிர்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com