மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரம்: டிரம்ப் புதிய சமரச முயற்சி - ஜனநாயக கட்சியினர் ஏற்க மறுப்பு

மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரத்தில் டிரம்ப் புதிய சமரச முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஜனநாயக கட்சியினர் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.
மெக்சிகோ எல்லைச்சுவர் விவகாரம்: டிரம்ப் புதிய சமரச முயற்சி - ஜனநாயக கட்சியினர் ஏற்க மறுப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்காக உள்நாட்டு நிதியில் 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற செனட் சபையில் செலவின மசோதா நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் அந்த துறைகள் முடங்கின. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தங்களுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால் அரசு துறைகள் முடக்கம் 4 வாரங்களை கடந்து நீடிக்கிறது.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் சாதகமான சூழல் அமையாவிட்டால் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனம் செய்ய நேரிடும் என டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதேசமயம் அகதிகள் விவகாரத்தில் டிரம்ப் கையாண்டு வரும் கடுமையான போக்கை கைவிட்டுவிட்டு, மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள டிரம்ப் முன்வந்துள்ளார்.

அதே சமயம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான 5.7 பில்லியன் டாலர் நிதியில் அவர் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்லையை திறக்க செய்து போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்கு வழி ஏற்படுத்தி தர விரும்புபவர்களிடம் இருந்து நம்முடைய எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்கு இதுவே சரியான நேரம்.

தீவிர இடதுசாரிகள் நமது எல்லையை கட்டுப்படுத்த முடியாது. எல்லைச் சுவர் என்பது ஒழுக்கக்கேடானது அல்ல. அதனை எதிர்ப்பவர்கள் தான் ஒழுக்கக்கேடானவர்கள்.

எல்லைச் சுவர் திட்டத்துக்கு 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினருடன் சமரசம் செய்ய முடிவு செய்துள்ளேன். அது என்னவென்றால் டிரீமர்ஸ் என அழைக்கப்படும், சிறு வயதில் அமெரிக்கா குடியேறியவர்களை பாதுகாக்கும் டி.ஏ.சி.ஏ திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறேன்.

அதே போல் போரினாலும், இயற்கை பேரிடரினாலும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்குள் வந்தவர்களுக்கு இந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தையும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கிறேன்.

இதன் மூலம் சிறு வயதில் அமெரிக்காவில் குடியேறிய 7 லட்சம் பேர், போர் மற்றும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு அமெரிக்க வந்த 3 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்.

இந்த பொது சமரசத்தை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசுத்துறைகள் முடக்கத்துக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எனினும் டிரம்பின் இந்த சமரசத்தை ஜனநாயக கட்சியினர் ஏற்க மறுத்துவிட்டனர். பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி இது குறித்து கூறுகையில், முன்பே நிராகரிக்கப்பட்ட திட்டங்களை ஜனாதிபதி டிரம்ப் இப்போது தொகுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசுத்துறைகள் முடக்கத்தின் மூலம் பெருமை தேடிக்கொண்ட அவர், அரசுத்துறைகள் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகளை கட்டாயமாக எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

செனட் சபை ஜனநாயக கட்சி தலைவர் சக் சும்மர், அரசுத்துறைகள் முடக்கத்தால் ஏராளமான அமெரிக்க ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை டிரம்ப் தற்போதுதான் உணர்ந்துள்ளார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com