

வாஷிங்டன்,
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகளாவிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ‘மைக்ரோசாப்ட்’(Microsoft Corporation). இந்நிறுவனத்தின் ‘விண்டோஸ்’(Windows), ‘அவுட்லுக் 365’(Outlook 365), டீம்ஸ் (Teams), எக்ஸ்பாக்ஸ் (Xbox), கோபைலட் (Copilot) உள்ளிட்டவை பல்வேறு முக்கிய சேவைகளை உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிப்பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், டீம்ஸ் உள்ளிட்ட சேவைகள் திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர். இந்த முடக்கத்தால் OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களின் ஏ.ஐ. சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகரித்த பணிச்சுமையின் காரணமாக பல சர்வர்கள் எதிர்பாராதவிதமாக செயல்படாமல் போனதே இந்த திடீர் முடக்கத்திற்கு காரணம் என்றும் மைக்ரோசாப்ட் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “பயனர்கள் மைக்ரோசாப்ட் சேவைகளில் சிக்கல்களை எதிர்கொள்வதாக வரும் புகார்களை குறித்து விசாரித்து வருகிறோம்.
பல சர்வர்கள் தற்போது வரை நிலையாக இருந்து வருகின்றன. மீதமுள்ள பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் ஆன்லைனுக்கு கொண்டுவரும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம், பெரும்பாலான இடங்களில் இணைய டிராபிக்கை மாற்று வழிகளுக்கு திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.