

லண்டன்,
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரசும் அங்கு அதிவேகத்தில் பரவி வருகிறது.
இதனால் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி உத்தரவு பிறப்பித்தார். அந்த புதிய உத்தரவின்படி இரவு நேர கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற நெரிசலான இடங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.
போரிஸ் ஜான்சனின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அவரது சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாத போரிஸ் ஜான்சான் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறார்.
இந்தநிலையில் போரிஸ் ஜான்சன் விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மந்திரிசபையில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த பிரெக்ஸிட் மந்திரி டேவிட் புரோஸ்ட் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரி பதவி விலகியது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.