

வெலிங்டன்,
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். ஆஸ்திரேலியா பயணத்தை முடித்த அமைச்சர் அங்கிருந்து நியூசிலாந்து சென்றார். நியூசிலாந்து ஹாமில்டன் கால்நடை மேம்பாட்டு கழகத்தை நேற்றுமுன்தினம் பார்வையிட்ட உடுமலை ராதாகிருஷ்ணன், அங்கு இருந்த டாக்டர் ஆலாமோகன் குழுவினருடன் கலந்துரையாடினார்.
கால்நடைகளை தாக்கும் நோயை கண்டறிதல், நோய் முன் கண்காணிப்பிற்காக தயார் செய்யும் வழிமுறைகள் குறித்த பயிற்சி அளித்தல், மாணவர்கள், பேராசிரியர்கள் பரிமாற்றம், பயிற்சி அளித்தல் தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். கால்நடை அபிவிருத்திக்கு தேவையான விந்து சேகரிப்பு நிலையம், கால்நடை மரபணு மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நோய் கண்டறியும் ஆய்வகங்கள் மற்றும் நவீன பால்பண்ணையை அவர் பார்வையிட்டார்.