

தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி வருகிறது.
அந்த பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்த தகவலை இஸ்ரேலிய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
தெஹ்ரானில் உள்ள காமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அலி காமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதன்படி, ‘ஆபிரகாம் லிங்கன்’ என பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது ஈரான் புரட்சி காவல்படையினர் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், அமெரிக்க கப்பல் கடுமையாக சேதடைந்ததாகவும், பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களுக்கு இனி நிலமும், நீரும் கல்லறையாக மாறும் என்று ஈரான் புரட்சி காவல்படை கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘எங்கள் நாட்டை பாதுகாத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வோம்’ என ஈரான் மந்திரி அப்பாஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.