

பியாங்யாங்,
சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடகொரியாவில் ஏவுகணைகளின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில், 2.5 மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதிபர் கிம் உத்தரவின்படி வடகொரியாவின் கடற்படையை அணு ஆயுதமயமாக மாற்றும் நோக்கில் அதிநவீன போர்க்கப்பல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், வடகொரிய கடற்படைக்கு சொந்தமான, சுமார் 5 ஆயிரம் டன் எடையுள்ள 'காங் கோன்' போர்க்கப்பல் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கியது.
அந்த போர்க்கப்பலை பழுதுபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 'காங் கோன்' போர்க்கப்பல் தற்போது மீண்டும் கடலில் இறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போர்க்கப்பலில் ஏறி அமர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகளின் சோதனைகளை கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டு அதிரடி ஆய்வு நடத்தினார்.
சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி போர்க்கப்பலை அடுத்த 2 மாதங்களுக்குள் முழுமையான ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார்.