

லண்டன்,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 2 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றார். அங்கு லண்டன் நகரில் சர்வதேச ஸ்ட்ரேடஜிக் (போர்த்திறம் சார்ந்த) கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விவகாரம் குறித்து அவர் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆழ்ந்த சிந்தனை இல்லை. பாகிஸ்தான் விவகாரத்தை கையாள்வது என்பது மிகக் கடினமானது. பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில் மேலாதிக்க அதிகாரம் எந்த ஒரு அமைப்பிடமும் இல்லை. அவர்கள் ஒத்திசைவான ஒரு அமைப்பை உருவாக்கும் வரையில் நாம் காத்திருக்க வேண்டும்.
டோக்லாம் விவகாரத்தை பொறுத்தவரையில், அது தனியொரு பிரச்சினை இல்லை. இது பல்வேறு நிகழ்வுகளில் ஒரு அங்கம்.
இதையெல்லாம் பிரதமர் மோடி ஆழ்ந்து கவனித்து வந்து இருந்தால் அதை அவர் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
டோக்லாமில் சீன படையினர் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
டோக்லாம் என்பது இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்தி. இங்கு சீனா அத்துமீறி படைகளை அவ்வப்போது குவிப்பதும், இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அனுப்புவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. கடைசியாக சீனப்படை இங்கு 73 நாட்கள் முகாமிட்டு இருந்ததும், இந்தியா பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் திரும்பி சென்றதும் நினைவுகூரத்தக்கது.