

டோக்கியோ,
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்து அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியா-ஜப்பான் இடையேயான 13-வது வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் டோக்கியோ சென்றடைந்தார். அவருக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மோடி மேற்கு டோக்கியோவில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைகளால் சூழப்பட்ட யமனாஷி நகருக்கு சென்றார்.
அங்குள்ள மவுண்ட் புஜி ஓட்டலில் மோடியும், ஷின்ஜோ அபேயும் நேற்று காலை சந்தித்தனர். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, ராஜஸ்தான் கைவினை கலைஞர்கள் தயாரித்த படிக கல்லால் ஆன கிண்ணத்தையும், கலை நயம்மிக்க கம்பளத்தையும் அபேவுக்கு மோடி நினைவு பரிசாக வழங்கினார்.
பிறகு இருவரும் இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவது குறித்த சம்பிரதாய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த 4 ஆண்டுகளில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இது 12-வது முறை ஆகும்.
பின்னர் இரு தலைவர்களும் அந்த ஓட்டல் வளாக புல்தரையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, ஷின்ஜோ அபே சிறப்பு மதிய விருந்தளித்தார்.
மதிய உணவை முடித்துக் கொண்ட பிறகு யமனாஷியில் உள்ள பனுக் நிறுவனத்தின் ரோபோ தொழிற்சாலைக்கு இருவரும் சென்று பார்வையிட்டனர். அப்போது, அங்கு ஒரு ரோபோ எந்திரம் 40 வினாடிகளில் ஒரு மோட்டாரின் பாகங்களை பொருத்தியதை கண்டு மோடி வியந்தார்.
பின்பு அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தனது சொந்த இல்லத்திற்கு மோடியை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அழைத்துச் சென்றார். ஷின்ஜோவின் சொந்த இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் வெளிநாட்டு தலைவரும் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு மோடிக்கு இரவு விருந்தும் அளிக்கப்பட்டது.
8 மணிநேரம் யமனாஷி நகரில் தங்கியிருந்த மோடி, ஜப்பான் பிரதமருடன் இரவு 8 மணி அளவில் கைஜி என்னும் விரைவு ரெயில் மூலம் டோக்கியோ நகருக்கு திரும்பினார்.
இன்று (திங்கட்கிழமை) மோடியும், ஷின்ஜோ அபேயும் அதிகாரப்பூர்வ முறையில் டோக்கியோ நகரில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது இரு தலைவர்களும் ராணுவம், பொருளாதார துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மோடியின் ஜப்பான் வருகை குறித்து பிரதமர் ஷின்ஜோ அபே வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தலைவர்களில் மோடி மிகவும் நம்பகத்தன்மை மிக்கவர். இந்திய-பசிபிக் கடல் பகுதியில் சுதந்திரமான சூழல் ஏற்படுவதற்காக இரு நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்திட அவர் விரும்புகிறார். மேலும் இப்பிராந்தியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தியா செயல்படுகிறது.
உலகின் செல்வச் செழிப்பிற்காக பாடுபடும் சக்தியாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவும், ஜப்பானும் உலகின் வளம் கொண்ட மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட மிகப் பெரிய நாடுகள் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு. ராணுவம், முதலீடு, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இந்தியாவுடன் ஜப்பான் தொடர்ந்து ஒருங்கிணைந்து விரிவான முறையில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.