பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதலில் மோடி மௌனியாகிவிடுகிறார், நியூயார்க் டைம்ஸ் விளாசல்

பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களில் மோடி மெளனியாகிவிடுகிறார் என நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் செய்து வருகிறது. #PMModi
பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதலில் மோடி மௌனியாகிவிடுகிறார், நியூயார்க் டைம்ஸ் விளாசல்
Published on

நியூயார்க்,

பெண்கள் தாக்கப்படும்போது நீண்ட காலம் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு உள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களில் மோடி மெளனியாகிவிடுகிறார் என விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி எந்தஒரு சம்பவத்திலும் உடனக்குடன் டுவிட் செய்து தன்னைத்தானே புத்திசாலியானவர் என காட்டிக்கொள்ளும் மனிதர். அவருடைய கட்சியான பாரதீய ஜனதாவின் அடிப்படையாக இருக்கும் தேசியவாதிகள் மற்றும் மதவாத சக்திகளால் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆபத்தை எதிர்க்கொள்ளும் போது அதுதொடர்பாக பேசுவதில் அவருடைய பேச்சை இழந்துவிடுகிறார். ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தைக்கு நீதி வேண்டி ஏராளமான இந்தியர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள், பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாரதீய ஜனதாவினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தும், பிரதமர் மோடி அரிதாகவே பேசினார், அவருடைய ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட பிற வழக்குகளிலும் அமைதியாகவே இருக்கிறார்.

கடந்தவாரம் வரை பிரதமர் மோடி காஷ்மீர் சிறுமி விவகாரம் குறித்து எந்தவிதமான வார்த்தையும் பேசவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பேசிய மோடி இந்தச் சம்பவம் நாட்டுக்கே அவமானம், நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று மட்டும் பொதுவாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் வடக்கு மாநிலமான ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதியில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்களை மிரட்டும் விதமாகவும், அவர்களை வெளியேற்றும் விதமாகவும் சிறுமியின் மீதான தாக்குதல் தொடர்பாக கடந்த வாரம் பேசவில்லை. சிறுமிக்கு நடந்த சம்பவம் மனிதகுல பேரழிவின் ஆழமாகும். ஜம்மு காஷ்மீரில் அவருடைய கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களே குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்து வழக்கறிஞர்களும் வழக்கை பதிவு செய்வதில் தடையை ஏற்படுத்தினார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் அவருடைய கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் விவகாரத்திலும் பேசவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை பேசிய மோடி இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானம், நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று மட்டும் பொதுவாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து, பிரதமர் மோடி கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிகவும் பொதுப்படையாக கடந்த 2 நாட்களாகத் தீவிரமாக நாம் ஆலோசித்து வரும் விவகாரம் என்று சிறுமியின் பெயரையும், உ.பியில் நடந்த பலாத்காரத்தையும் கூட குறிப்பிடாமல் பேசினார். இதுபோன்றே முன்னர் நடந்த சம்பவங்களிலும் பிரதமர் மோடி மேம்போக்கான அணுகுமுறையை கடைப்பிடித்தார்.

அதாவது பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் இஸ்லாமிய சிறுபான்மையினரை தாக்கிய போதும், தலித்கள் மீது ஆதிக்கச்சாதியினர் தாக்குதல் நடத்தியபோதிலும் பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்காமல் மேம்போக்காகவே பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த மவுனம் வேதனையையும், குழப்பத்தையும் தருகிறது. முன்னதாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் என்ன பாடம் புகட்டினார்கள் என்பதைப் பார்த்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும். 2012-ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 2014 தேர்தலில் காங்கிரஸ் அரசியல் ரீதியாக மிகப்பெரிய விலை கொடுத்தது என்பது அவருக்கு (மோடி) நினைவிருக்கும்.

அந்தத்தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது பிரதமர் மோடி, மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆட்சி நடத்துவோம், ஊழலை ஒழிப்போம் என்றெல்லாம் மக்களுக்கு உறுதியளித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் மோடி எந்த ஒரு சம்பவத்திலும் மவுனமாக இருந்து, திசைமாற்றி செல்வது வேதனையளிக்கிறது.

பிரதமர் மோடி தன்னுடைய ஆதரவாளர்கள் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த வழக்குகள், சம்பவங்கள் எல்லாம், வன்முறையின் உதாரணங்களாகும். இஸ்லாமியர்கள், பெண்கள், தலித்கள் மற்றும் பிற விளிம்புநிலை சமூகத்தில் இருப்பவர்கள் மீது தேசியவாத சக்திகள் திட்டமிட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டு தாக்குவதற்கான உதாரணங்களாகும். தங்களுக்கு வேண்டியவர்களையும், ஆதரவாளர்களையும் மட்டுமல்லாது, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அவர்களுக்காகப் போராட வேண்டியது பிரதமரின் கடமையாகும் என நியூயார்க் டைம்ஸ் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com