

தெக்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்ட நிலையில் அவரது மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்த மொஜ்தபா கமெனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் மொஜ்தபா கமெனி பெயரில் அறிக்கைகள் வெளியானது.
இதில் அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகளை விடுத்து இருந்தார். தனது தந்தையின் இறுதிச் சடங்கிலும் அவர் பங்கேற்கவில்லை.இதற்கிடையே மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்றும் இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டது. மேலும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. இந்த தகவல்களை மேலும் சில இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில் போருக்குப் பின் முதல் முறையாக மொஜ்தபா கமெனியின் வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த வீடியோவை ஈரானின் அரசு செய்தி நிறுவனமான மெஹர் வெளியிட்டது.அதில் மொஜ்தபா கமெனி தரையில் அமர்ந்தபடி சிலருடன் உரையாடுவது மற்றும் கைகளை நன்றாக அசைப்பது இடம்பெற்று உள்ளது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தோற்றம் அளிக்கிறார். மொஜ்தபாவின் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பதிலளிக்கும் விதமாகவும், ஆதாரமாகவும் இந்த வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் இந்த வீடியோ எந்த தேதியில் எடுக்கப்பட்டது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்று சிலர் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். அமெரிக்காவின் தாக்குதலில் மொஜ்தபா கமெனியின் முகம், கை-கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதற்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றார் என்று முன்பு தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெக்ரானில் உள்ள ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மொஜ்தபா கமெனியுடன் பேசியதாகவும், அப்போது மொஜ்தபாவை நேரடியாக சந்திக்காமல் அவரது குரலை மட்டும் கேட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது