Image Courtesy : @Ollanta_HumalaT
Image Courtesy : @Ollanta_HumalaT

பணமோசடி வழக்கு: பெரு நாட்டின் முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை

அதிபரின் மனைவி ஹெரேடியா தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார்.
Published on

லிமா,

தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் அதிபர் ஒல்லாண்டா ஹுமாலா (வயது 62). இவர் 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேசிடம் இருந்து சுமார் ரூ.2 கோடி வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முன்னாள் அதிபர் ஒல்லாண்டா, அவரது மனைவி ஹெரேடியா ஆகியோர் மீது தலைநகர் லிமாவில் உள்ள கோர்ட்டில் பணமோசடி வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே 2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஒல்லாண்டா உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே அவரது மனைவி ஹெரேடியா பெருவில் உள்ள பிரேசில் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார். அங்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார். மேலும் இந்த தண்டனையை எதிர்த்து ஒல்லாண்டா ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளனர். அந்த வழக்கில் ஹெரேடியா பிரேசிலில் இருந்து கொண்டே காணொலிக்காட்சி மூலம் ஆஜர் ஆவார் என அவரது வக்கீல் வில்பிரடோ பெட்ராசா கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com