

காத்மாண்டு,
பண மோசடி புகாரில் நேபாள நாட்டின் முன்னாள் நிதி மந்திரி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நேபாள நாட்டில் முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால் அங்கிருந்த அரசாங்கமே அடியோடு கவிழ்ந்தது. இதையடுத்து ஊழலை வேரறுப்பதாக வாக்குறுதி அளித்து, இளைஞர்களின் பேராதரவோடு புதிய பிரதமர் பாலந்திரா ஷா கடந்த மார்ச் மாதம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.
அவர் பொறுப்பேற்றது முதலே பழைய ஊழல் புள்ளிகளுக்கு எதிராகச் சாட்டை சுழற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நள்ளிரவில் ஒரு அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின் முன்னாள் நிதி மந்திரியும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான விஷ்ணு பிரசாத் பவுடெல் (வயது 66), மேற்கு நேபாளத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் அதிரடியாக வளைத்துப் பிடிக்கப்பட்டார். பண மோசடி புகாரில் சிக்கிய அவரை, அதிகாரிகள் தற்போது காத்மாண்டுவிற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.