வெனிசுலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு

கோப்புப்படம்
வெனிசுலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவாகும் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
நியூயார்க்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார். இது உலக நாடுகளால் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
எண்ணெய் வளத்திற்காக வெனிசுலா குறி வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் டிரம்புக்கு எதிராக எழுந்தது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட பின்னர், இந்த மாத தொடக்கத்தில், நாட்டின் தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி எலோய்னா ரோட்ரிக்ஸ் முறைப்படி பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், வெனிசுலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டு உள்ள செய்தியில், வெனிசுலாவில் சிறை பிடிக்கப்பட்ட எண்ணற்ற அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
வெனிசுலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவாகும் என தெரிவித்து உள்ளது. மதுரோ நாடு கடத்தப்பட்ட பின்னர், அமைதி ஏற்படுவதற்காக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெனிசுலா மற்றும் வெளிநாட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அந்நாட்டு நாடாளுமன்ற தலைவர் ரோட்ரிக்ஸ் கடந்த வாரம் கூறினார். இந்த சூழலில் இந்த கைதிகளின் விடுவிப்பு நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி வெனிசுலாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான போரோ பீனல் வெளியிட்ட செய்தியில், அரசியல் காரணங்களுக்காக பிடிபட்ட 56 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்தது.
எனினும், வெனிசுலா அரசு 400 பேரை விடுவித்து இருக்கிறோம் என தெரிவித்து உள்ளது. ஆனால், விடுவிப்புக்கான சான்றுகளையோ அல்லது எப்போது விடுவித்தது என்பது பற்றிய தகவலையோ வெளியிடவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களின் அடையாளமும் வெளியாகவில்லை. இதனால், அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லது பிற அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களா? என்ற விவரம் தெரியவில்லை. கடந்த ஜூலையில், வெனிசுலா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 10 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர்.






