கனடாவில் தொடரும் அட்டூழியம்! எரிவாயு குழாய்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்!

கனடாவில் போராட்டக்காரர்கள் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தினர்.
கனடாவில் தொடரும் அட்டூழியம்! எரிவாயு குழாய்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்!
Published on

ஒட்டாவா,

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.

இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் தீவிரமடைந்ததால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.இதனால் அந்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி வருகின்றனர்.

இதனிடையே, கனடாவில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020ம் ஆண்டு போராட்டக்காரர்கள் கனடாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனடாவில் சி ஜி எல் குழாய் வழியாக, இயற்கை எரிவாயு கிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து கொண்டு வர கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடும் ஆட்சேபனை மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குழாய்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் இப்போது மீண்டும் அந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ள அவர்கள், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை சேதப்படுத்தினர்.

எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை போராட்டக்காரர்கள் தாக்கி உள்ளனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் செல்லாமல் இருப்பதற்காக, மரங்களை வெட்டி போட்டு சாலையை மறித்து வைத்தனர்.

இது குறித்து விசாரிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தாக்கி உள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தினர். அவர்கள் கையில் கோடாரிகள் போன்ற ஆயுதங்களுடன் செல்லும் வழியில் நின்றிருந்த மரங்களை வெட்டி போட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீது புகை குண்டுகளை எறிந்தனர், தீப்பந்தங்களால் தாக்கி உள்ளனர். அதில் சில போலீசார் காயமடந்தனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை நடந்தது என்று கூறினர்.

அவர்களின் எதிர்ப்புகளை தாண்டி சம்பவ இடத்தி ஆய்வு செய்த போலீசார் அங்கு பல மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com