தஜிகிஸ்தானில் ஹிஜாப் அணிய தடை: மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை


தஜிகிஸ்தானில்  ஹிஜாப் அணிய தடை: மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை
x

Photo Credit: AFP

தினத்தந்தி 23 Jun 2024 1:18 PM IST (Updated: 23 Jun 2024 1:20 PM IST)
t-max-icont-min-icon

தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது.

துசான்பே,

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்த நாட்டில் 1 கோடிப் பேர் வசிக்கும் மக்களில், 96 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். இந்த நிலையில், தஜிகிஸ்தான் அரசு கல்வித் துறை, கடந்த 2007ஆம் ஆண்டு இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய உடைகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிவதற்கு தடை விதித்தது. அப்போதுமுதலே ஹிஜாப் மீதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

அந்த வகையில், தஜிகிஸ்தான் நாட்டில் தற்போது பெண்கள் ஹிஜாப் அணியவும் முக்கியமான பண்டிகைகளைக் கொண்டாடவும் தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு ரூ.3 லட்சமும் மத தலைவர்களுக்கு ரூ.5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story