

நியூயார்க்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் டாக்டர் செலின் கவுண்டர் இடம் பிடித்துள்ளார். இதுதொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானதும் செலின் தனது பெயருக்குப் பின்னால் கவுண்டர் என்ற அடையாளத்தை ஏன் பயன்படுத்துகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் பலர் அவர் தனது பெயருக்கு பின்னால் உள்ள கவுண்டரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்தநிலையில் தனது பெயர் தனது அடையாளம் என்றும் அதனால் பெயரை மாற்றப் போவதில்லை என்றும் செலின் கவுண்டர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் பிறந்த போது 1970-களின் முற்பகுதியில் எனது தந்தை தனது பெயரை கவுண்டர் என்று மாற்றிவிட்டார். என் பெயர் என் பெயர்தான். இந்த வரலாறு சிலருக்கு வேதனையாக இருந்தாலும், அது எனது வரலாறு மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். நான் திருமணம் செய்துகொண்டபோது எனது பெயரை மாற்றவில்லை. நான் இப்போது அதை மாற்றமாட்டேன்.
பலரும் ஏன் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் சேர்த்துள்ளீர்கள் என கேட்கிறார்கள். எனது அப்பா 1960 களிலேயே அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். அமெரிக்கர்கள் நடராஜன் என்ற பெயரை உச்சரிப்பதற்கு கஷ்டப்பட்டதால் அவர் தனது பெயரை கவுண்டர் என மாற்றினார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.