மியான்மர் ராணுவ தாக்குதல்; 459 பேர் உயிரிழப்பு

மியான்மர் நாட்டில் அமைதி வழியிலான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் 459 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நைபிடா,

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினம்தோறும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்திற்கு எதிராக ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

இந்நிலையில் மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 114 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி 1ந்தேதி முதல் இதுவரை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணுவ ஆட்சியின் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், டென்மார்க், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ராணுவத்தின் தொடர்ச்சியான தாக்குதல் ஏற்று கொள்ள முடியாதது. சர்வதேச அளவில் ஓர் உறுதியான, ஒன்றுபட்ட மற்றும் தீர்வு ஏற்பட கூடிய தேவை உள்ளது என தெரிவித்துள்ளார்.

மியான்மரில் பழங்குடியின குழுக்களால் சூழப்பட்ட கேரன் தென்கிழக்கு மாநில பகுதியில் ராணுவத்தின் வான்வழி தாக்குதலை தொடர்ந்து கிராமவாசிகள் 3 ஆயிரம் பேர் தாய்லாந்து நாட்டுக்கு தப்பியோடியுள்ளனர். மியான்மர் நாட்டில் மு டிரா மாவட்டத்தில் லூ தாவ் நகர் பகுதியில் 5 இடங்களில் பர்மா ராணுவம் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ந்தேதியில் இருந்து போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 459 பேர் உயிரிழந்து உள்ளனர் என அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

மியான்மரின் கச்சின் மாநிலம் மற்றும் நாட்டின் வடக்கே சகாய்ங் பகுதி, தெற்கே டாவெய் பகுதி ஆகியவற்றில் ஒன்று கூடிய மக்கள் 3 விரல்களை கொண்டு வணக்கம் தெரிவித்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com