

புதுடெல்லி,
17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையில் வரும் 30-ந்தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்கிறார் என குடியரசு தலைவர் மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி 2-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார். தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது.
இந்நிலையில், பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாக். பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து "ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியையும், முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.