நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பட்டியலில் இந்தியர் ‘நாசா’ தேர்வு

நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளி ஒருவரையும் ‘நாசா’ தேர்வு செய்து உள்ளது.
Image courtesy : NASA
Image courtesy : NASA
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, 2024ம் ஆண்டு, நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம், ஆர்டெமிஸ் நிலவில் தரை இறங்கும் திட்டம் என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் நிலவுக்கு செல்வதற்கான 18 விண்வெளி வீரர்கள் குழுவை நாசா தேர்வு செய்துள்ளது. இவர்களில் பாதிப்பேர் பெண்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இந்த குழுவினரை புளோரிடாவில் உள்ள நாசா கென்னடி விண்வெளி மையத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சக அமெரிக்கர்களே, நம்மை எதிர்காலத்தில் நிலவுக்கும், அதற்கு அப்பாலும் கொண்டு செல்லும் ஹீரோக்களை அறிவிக்கிறேன் என கூறி அறிவித்தார்.

இந்த 18 விண்வெளி வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வம்சாவளி வீரர் இடம் பெற்றிருக்கிறார். அவர், ராஜா ஜான் வர்புதூர் சாரி (வயது 43) ஆவார். இவர் இந்தியரான சீனிவாஸ் வி சாரி, பெக்கி எக்பர்ட் தம்பதியரின் மகன் ஆவார். அமெரிக்காவில் எம்.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் அமெரிக்க விமானப்படை கல்வி நிறுவனத்தில் படித்து பட்டமும், அமெரிக்க கடற்படை சோதனை விமானி கல்லூரியில் பயிற்சியும் பெற்றவர். 2017ம் ஆண்டு நாசாவில் சேர்ந்தார். விண்வெளி வீரர் ஆவதற்கான பயிற்சியை அவர் நிறைவு செய்துள்ளார்.

சந்திரனுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் குழுவில் அங்கம் வகித்ததில் பெருமை என ராஜா ஜான் வர்புதூர் சாரி கூறி உள்ளார்.

இந்த பட்டியலில் ராஜா சாரியுடன் சேர்த்து ஸ்டெபானி வில்சன், கிறிஸ்டினா கோச், விக்டர் களோவர், ஜோசப் அகாபா, கேலா பார்ரன், மேத்யூ டோமினிக், வாரன் ஹோபர்க், ஜானி கிம், கெஜெல் லிண்ட்கிரென், நிகோல் ஏ.மான், ஏன் மெக் கிளென், ஜெஸ்ஸிகா மெர், ஜாஸ்மின் மொஹம்பெலி, கேட் ரூபின்ஸ், பிராங் ரூபியோ, ஸ்காட் டிங்கிள், ஜெஸ்ஸிகா வாட்கின்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆரம்ப கட்ட பணிகள்

நிலவுக்கு விண்வெளி வீரர்கள் செல்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்.

நிலவுக்கு செல்லும் பயணம் பற்றி தலைமை விண்வெளி வீரர் பாட் பாரஸ்டர் கூறுகையில், நாங்கள் நிலவுக்கு செல்லும்முன் எங்கள் முன்னால் உற்சாகமான வேலைகள் உள்ளன. நிலவின் மேற்பரப்பில் நடப்பது நம்மில் எவருக்கும் ஒரு கனவு நனவாகும் நிகழ்வு ஆகும். அதைச்செய்வதில் எந்தப் பங்கையும் நாம் செய்வது கவுரவம் என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com