தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு அடையாள திட்டம்: யூ.ஏ.இ. பாஸ் செயலியில் முக அடையாளத்தை பதிவு செய்யும் வசதி

யூ.ஏ.இ. பாஸ் செயலியில் முக அடையாளத்தை பதிவு செய்யும் வசதி தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு அடையாள திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தேசிய டிஜிட்டல் பாதுகாப்பு அடையாள திட்டம்: யூ.ஏ.இ. பாஸ் செயலியில் முக அடையாளத்தை பதிவு செய்யும் வசதி
Published on

இதன் மூலம் 5 நிமிடங்களில் தேவையான சேவையை டிஜிட்டல் முறையில் பெறலாம்.

இது குறித்து நேற்று அமீரக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபியில் கடந்த பிப்ரவரி மாதம் அமீரக மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அரசுத்துறை சேவைகளில் பொதுமக்கள் முக அடையாளத்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

இதில் சில முக்கிய துறைகளில் அடையாள ஆவணத்திற்கு பதிலாக தனிநபர்களுக்கு முக அடையாள (பேசியல் ஐ.டி) முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. தற்போது இந்த திட்டம் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமீரகங்களின் உள்நாட்டு அரசுத்துறைகள் மற்றும் அரசு ஏஜென்சி என பல்வேறு துறைகளில் முக அடையாள முறையை பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறைகளில் நடைபெறும் பணம் மற்றும் இதர ஆவண பரிமாற்றங்களுக்கு இந்த முறை பயன்படும். தனிநபர் அடையாளத்தை காண்பதற்கும், முறைகேட்டை தடுப்பதற்கும் இந்த முறை பயனுள்ளதாக உள்ளது.

இதற்கு யூ.ஏ.இ. பாஸ் என்ற செயலியை ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ் மென்பொருளுடைய செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் அமீரக அடையாள அட்டையை ஒருமுறை பதிவு செய்து கொண்டால் அதில் உள்ள தகவல்கள் உறுதி செய்யப்படும். பின்னர் அதில் உள்ள பயோமெட்ரிக் பேசியல் பிங்கர்பிரின்ட் தொழில்நுட்பத்தில் முக அடையாளத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

செல்போனில் கைரேகை பதிவு செய்து கொள்வது போன்று இதுவும் எளிமையானது. முக அடையாளத்தை பதிவு செய்து விட்டால் அரசு சேவைகளில் அடையாள ஆவணங்களுக்கு பதிலாக முக அடையாளத்தை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது.

சாதாரணமாக அரசு சேவை மையங்களில் குறிப்பிட்ட சேவையை பெறுவதற்கு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் தேவைப்படும். யூ.ஏ.இ. செயலியில் முக அடையாளத்தை வைத்து எளிதாக 5 நிமிடங்களில் தேவையான சேவையை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்லலாம். இதில் 130 அரசு மற்றும் பொதுத்துறைகளின் 6 ஆயிரம் சேவைகளை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com