காசா மருத்துவமனை தாக்குதல்; தேசிய பாதுகாப்பு குழு விசாரணைக்கு பைடன் உத்தரவு

காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொள்ளும்படி அதிபர் பைடன் உத்தரவிட்டு உள்ளார்.
காசா மருத்துவமனை தாக்குதல்; தேசிய பாதுகாப்பு குழு விசாரணைக்கு பைடன் உத்தரவு
Published on

டெல் அவிவ்,

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் ஆண்ட்ரூஸ் படை தளத்தில் இருந்து, அமெரிக்க அதிபர் பைடன் தனி விமானத்தில் புறப்பட்டு, போரால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு இன்று சென்றடைந்து உள்ளார்.

இஸ்ரேல் சென்றடைந்த பைடனை, அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு, அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் ஆகியோர் வரவேற்றனர். இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மேற்கொண்ட இந்த பயணம் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளரான ஜான் கிர்பை கூறும்போது, நெதன்யாகுவை சந்தித்து பேசும்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் நடந்து வரும் போரானது தொடர்ந்து அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்யும்படி பைடன் கூறுவார்.

இந்த மோதலானது நீட்டிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தினையும் அவர் தெளிவுப்படுத்துவார். காசாவில் நிலவும் மனிதநேய சூழலை பற்றியும் அவர் பேசுவார். மனிதநேயம் சார்ந்த உதவிகளையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என தெளிவுப்படுத்துவார் என்று கிர்பை கூறியுள்ளார்.

இந்த நிலையில், காசா மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என காசா கூறியது பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த கிர்பை, இந்த குண்டுவெடிப்புடன் தொடர்பில்லை என இஸ்ரேல் முன்பே மறுத்து விட்டது.

எனினும், இதுபற்றி தேசிய பாதுகாப்பு குழு விசாரணை மேற்கொள்ள பைடன் உத்தரவிட்டு உள்ளதுடன், குண்டுவெடிப்பு பற்றிய அதிக விவரங்களை அறியவும், அதற்கு யார் பொறுப்பு என கண்டறியவும் உத்தரவிட்டு உள்ளார் என கிர்பை கூறியுள்ளார்.

இதேபோன்று, காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்ததும் ஆழ்ந்த வருத்தமடைந்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா 2 ஆகியோரை தொடர்பு கொண்டு பைடன் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com