

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற பெயரில் அரசியல் கட்சியை துவங்கினார். இந்த கட்சி கைபர் பகதுங்வா மாகாணத்தில் ஆளும்கட்சியாகவும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.அறக்கட்டளை என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதியுதவி பெற்றதாகவும், அந்த பணத்தை வைத்து சொத்துகள் வாங்கியதாகவும் இம்ரான் கானுக்கு எதிராக குற்றச்சாடுகள் குவிந்தன.
இந்த பணத்தை வைத்து அரசியல் கட்சியை நடத்தும் இம்ரான் கானையும், அவரது நெருங்கிய கூட்டாளியும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜஹாங்கிர் கான் டரீன் என்பவரையும் பொது வாழ்வில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நவாஸ் ஷரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பொது வாழ்வில் இருந்து இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் ஜஹாங்கிர் கான் டரீனுக்கு ஆயுள் முழுவதும் பொது வாழ்வில் ஈடுபட தடை விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.இந்நிலையில், ஊழல் வழக்கில் பிரதமரான தன்னை தகுதி நீக்கம் செய்துவிட்டு இம்ரான் கானை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் இரட்டை நிலைப்பாட்டுக்கு நவாஸ் ஷரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தனக்கெதிரான ஊழல் வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியேவந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், கற்பனையான ஒரு சொத்து குவிப்பு புகாரின்பேரில் சில நொடிகளுக்குள் ஒரு பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். வெளிநாடுகளில் தனக்கு இருக்கும் சொத்துகள் தொடர்பாக வெளிப்படையாக பேட்டியளித்த இம்ரான் கான் தகுதி நீக்கம் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, நீதியை மீட்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.