

புதுடெல்லி,
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகள் தங்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் ஈவு இரக்கமின்றி காட்டுமிராண்டித்தனமாக சுட்டு தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலில் 18 போலீசார் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான். பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா கூறியது. இருந்த போதிலும் எங்கள் மண்ணில் இருந்து தாக்குதல் நடத்தப்படவில்லை என மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் விசாரணையிலும் மெத்தனம் காட்டியது.
இந்த நிலையில், மும்பை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் என்று நவாஸ் ஷெரீப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள நவாஸ் ஷெரீப், நேரடியாக ஒப்புக்கொள்ளாமல் மறைமுகமாக இவ்வாறு கூறியுள்ளார். நவாஸ் ஷெரீப் கூறும் போது,
''பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. (தீவிரவாதக் குழுக்கள் பெயரை குறிப்பிடவில்லை) அரசில் எந்தவிதத்திலும் பங்கு பெறாமல், ஆனால், அரசில் மிகுந்த அதிகாரம் மிக்க குழுக்களாக தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பயங்கரவாதிகளை எல்லை தாண்டிச் சென்று மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்கலாம். இதை விளக்கமுடியுமா? இதுதான் பாகிஸ்தான் கொள்கையா?
இப்படிப்பட்ட நிகழ்வுக்குப்பின், நாம் வழக்கை இன்னும் முடிக்காமல் முடிக்காமல் வைத்திருப்பது ஏன். இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது. இதைத்தான் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் கேட்கிறார்கள். இதற்கு பதில்கூற முடியாமல் பாகிஸ்தான் தவிக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.