உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறிய 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் - ஐ.நா.சபை அதிர்ச்சி தகவல்!

கடந்த 24 மணி நேரத்தில், 1 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலாந்து-உக்ரைன் எல்லையை கடந்துள்ளனர் என்ற தகவலை போலாந்து அரசு தெரிவித்துள்ளது.
imagecourtesy: https://www.harrowtimes.co.uk/
imagecourtesy: https://www.harrowtimes.co.uk/
Published on

நியூயார்க்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். அந்த வகையில் ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்ற தகவலை ஐ.நா.சபையின் அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகதிகளுக்கான ஐ நா சபையின் உயர்மட்ட கமிஷனர் ஷபியா மண்டோ கூறுகையில், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால், கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 16 ஆயிரம் மக்கள் சர்வதேச எல்லைகளை கடந்துள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மணி நேரமும் இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது என்று தெரிவித்தார்.

பிப்ரவரி 26ந்தேதி அன்று மட்டும் ரஷிய படையெடுப்பு காரணமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ரஷிய தாக்குதல் எதிரொலியாக உக்ரைன் நாட்டு குடிமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பித்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த போரால் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில், கிட்டத்தட்ட 40 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

அகதிகளாக வெளியேறுபவர்கள் அண்டை நாடுகளான போலாந்து, மோல்டோவா, ஹங்கேரி, ரோமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

உக்ரைனை விட்டு வெளியேறுபவர்களில் எத்தனை பேர் எந்தெந்த நாடுகளில் தஞ்சம் சேருகின்றனர் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், அதிகபட்சமாக போலாந்தில் அதிகமானோர் நுழைந்துள்ளனர்.

முன்னதாக, 2014ம் ஆண்டு ரஷியாவின் உக்ரைனிய ஆக்கிரமிப்பால், அப்போதைய காலகட்டத்திலிருந்தே போலாந்து நாட்டில் 20 லட்சம் உக்ரைனியர்கள் நிரந்தரமாக வசித்து வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அவர்கள் போலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில், 1 லட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலாந்து-உக்ரைன் எல்லையை கடந்துள்ளனர் என்ற தகவலை போலாந்து அரசு தெரிவித்துள்ளது.

போலாந்து நாட்டுக்குள் நுழைவதற்காக, இருநாட்டு எல்லையில் உள்ள மேடைகா எல்லை பகுதியில், 15 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com