பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி

போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்று அவர் கூறினார்.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல:  ஈரான் ஜனாதிபதி
Published on

தெஹ்ரான்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

இந்நிலையில், ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை இருபுறமும் அமெரிக்காவின் கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. எனினும், ஈரானும் அந்த பகுதியில் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த பகுதியை எரிசக்தி, உணவு வினியோகத்திற்கான சரக்குகள் போன்றவற்றை கொண்டு செல்லும் கப்பல்கள் அதற்கு ஈடாக, சுங்க கட்டணம் மற்றும் வரிகளை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும் என ஈரான் தெரிவித்தது.

இதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் வெளியிட்டு உள்ள செய்தியில், நாங்கள் எதிரியின் முன் எப்போதும் தலை வணங்க மாட்டோம். சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், நாங்கள் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல.

ஈரானின் உரிமைகளை பாதுகாப்பதுடன், உறுதியான வலிமையுடன் தேச நலன்களை பாதுகாப்பதே எங்களுடைய இலக்காகும். ஈரான், தன்னுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது என வலியுறுத்தி கூறினார்.

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் சமீபத்திய முன்மொழிதல்களுக்கான விசயங்களுக்கு, பாகிஸ்தானிய நடுவர்களின் வழியே தன்னுடைய பதிலை ஈரான் அளித்திருக்கிறது என்றார்.

இதன்படி, இந்த பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்று அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com