‘ஐரோப்பிய யூனியனில் மீண்டும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை கைவிடப்படும்' - ஐஸ்லாந்து பிரதமர் அறிவிப்பு

ஐஸ்லாந்தில் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்ட வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது.
‘ஐரோப்பிய யூனியனில் மீண்டும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை கைவிடப்படும்' - ஐஸ்லாந்து பிரதமர் அறிவிப்பு
Published on

ரேக்யாவீக்,

ஐரோப்பிய கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. இருப்பினும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக ஐஸ்லாந்து இதுவரை இணையவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு ஐஸ்லாந்து விண்ணப்பித்திருந்தது. ஆனால் மீன்பிடி நீர்நிலைகள் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், ஐரோப்பிய யூனியனில் இணையும் முடிவை ஐஸ்லாந்து அரசு கைவிட்டது.

இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் மீண்டும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து ஐஸ்லாந்தில் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்ட வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேச்சுவார்த்தைக்கு எதிராக 52.5 சதவீதம் பேரும், ஆதரவாக 47.5 சதவீதம் பேரும் வாக்களித்ததாக ஆர்.யு.வி. ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தலைநகர் ரேக்யாவீக்கில் ஆதரவாக 57.5 சதவீதம் வரை வாக்குகள் கிடைத்த போதிலும், கிராமப்புறங்களில் எதிராக 60 சதவீதத்துக்கும் மேல் பதிவானது. அமெரிக்க சுங்கவரி அச்சுறுத்தல், அண்டை நாடான கிரீன்லாந்தை இணைப்பது தொடர்பான பேச்சுக்களுக்கு மத்தியில், வலுவான புவிசார் அரசியலுக்காக இந்த வாக்கெடுப்பு முக்கியம் எனக்கூறி பிரதமர் கிறிஸ்ட்ரூன் பிரோஸ்டாடோட்டிர் அரசு வாக்கெடுப்பை நடத்தியது.

இருப்பினும், கூடுதல் இணைப்பு தேவையில்லை என மக்கள் கருதியுள்ளனர். இந்த எதிர்ப்பு முடிவு மூலமாக ஐரோப் பிய யூனியனில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை கைவிடப்படும் என பிரதமர் கிறிஸ்ட்ரூன் பிரோஸ்டாடோட்டிர் அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com