நேபாள பெருவெள்ளம்: 1,280-ஐ கடந்த பலி எண்ணிக்கை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் இல்லை

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில் 5,620-க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
நேபாள பெருவெள்ளம்:  1,280-ஐ கடந்த பலி எண்ணிக்கை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் இல்லை
Published on

காத்மாண்டு,

நேபாள பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பெருக்கெடுத்த வெள்ளம்

இமயமலை பிராந்தியத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தை நாசமாக்கியது. கரைபுரண்டு பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன.

நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மாயமாகி உள்ளனர்.

இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

1,280 பேர் பலி

இதில் தற்போதைய நிலவரப்படி 1,280 பேரின் உடல் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் பெரும்பாலான உடல்கள் உருக்குலைந்து அடையாளம் காண முடியாத வகையில் உள்ளன. எனவே மரபணு சோதனை நடத்தப்பட்டு, மொத்தமாக அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

பேரிடரில் உயிர் விட்ட 1,200-க்கு மேற்பட்டோரின் உடல் மீட்கப்பட்டு உள்ள நிலையில், 5,620 பேரை இன்னும் காணவில்லை. இதில் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்களும் அடங்குவர்.

இதற்கிடையே சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகி விட்டன. இதனால் மாயமானவர்கள் பிழைத்திருக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது.

இறுதிச்சடங்குகள்

எனவே அவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யும் நிகழ்வுகள் நேபாளத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. மாயமானவர்களின் உறவுகள் தங்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் ரசுவா மாவட்டத்தின் பகரேபேசி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர், பேரழிவில் சிக்கி மாயமான தங்கள் உறவுகளின் புகைப்படங்கள், அவர்களை அடையாளப்படுத்தும் பொம்மைகளை வைத்து இந்த சடங்குகளை செய்தனர்.

அதேநேரம் பல குடும்பங்களுக்கு தங்குவதற்கு இடமும், சடங்குகளை நடத்த பூசாரிகளும் இல்லாததால், இறுதிச்சடங்குகளை நடத்துவது கூட கடினமாகி இருக்கிறது.

எனவே, இந்த கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காத்மாண்டு மற்றும் பிற இடங்களுக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், மேலும் பல குடும்பங்கள் புறப்பட தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

அடையாளம் காண்பதில் சிரமம்

இதனால் தலைநகர் காத்மாண்டுவில் இத்தகைய சடங்குகளுக்காக இயங்கி வரும் பொதுகட்டமைப்புகள் அனைத்தும் நிரம்பி வழிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கோவில்களில் இடமின்றி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தங்கள் உறவுகள் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும், இந்த அடையாள இறுதிச்சடங்குகளை மேற்கொள்வதாக குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த கூட்டு இறுதிச்சடங்குகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் தீராத சோகம் நிலவி வருகிறது.

தொடர் மழை: மீட்புப்பணிகளுக்கு இடையூறு

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போடேகோஷி நதிப்படுகை நெடுகிலும் நேற்றும் மழை நீடித்தது. இதனால் இந்த நதி மட்டுமின்றி திரிசூலி உள்ளிட்ட நதிகளிலும் நீர்மட்டம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த தொடர் மழை, மீட்புப்பணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கு நிகழ்ந்த நேரத்தில் நேபாளத்தை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் புனித யாத்திரை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக திபெத் சென்றிருந்தனர்.

இந்த பேரிடரில் சிக்கிக்கொண்ட அவர்களில் 2,500-க்கு மேற்பட்டோர் நாடு திரும்பிய நிலையில், 100-க்கு மேற்பட்டோரை காணவில்லை என நேபாள வெளியுறவு செய்தித்தொடர்பாளர் லோக் பகதூர் சேத்ரி கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com