நேபாள வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,365 ஆக உயர்வு

நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேபாள வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,365 ஆக உயர்வு
Published on

காத்மாண்டு,

இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன.

நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். திரிசூலி 3ஏ என்ற நீர்மின் திட்ட சுரங்கப் பாதைக்குள் தடிமனான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு இடையே பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நேபாள ராணுவத்தினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 5,326 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 589 பேர் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் இருந்து உயிரற்ற உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. நேபாளத்தை உலுக்கிய இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 1,365 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 102 உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், அடையாளம் காணப்படாத 1,147 உடல்கள், பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com