

கான்பெர்ரா,
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமையல் கலைஞராக பணிபுரியும் சோனியா பாட்டீல், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் கடினமான பணியில் தன் இரவு நேரங்களை செலவிட்டு தன்னார்வலராக உதவி வருகிறார்.
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த மாதம் 26-ந்தேதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் மக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் சோனியா மனோஜ் பாட்டீல் (சமையல் கலைஞர்). இவருக்கு நேபாளத்துடனோ அல்லது அங்கு பாதிக்கப்பட்டவர்களுடனோ எந்தவித நேரடி தொடர்பும் இல்லை. எனினும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களின் உறவினர்களின் உடல்களைத் தேடி அலைவதையும், படும் துயரத்தையும் முகநூல் போன்ற சமூக வலைதள பக்கங்கள் மூலம் அவர் அறிந்து கொண்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மன வேதனையை குறைக்க நினைத்த சோனியா, நேபாள அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அடையாளம் தெரியாத உடல்களின் புகைப்படங்களை இரவு நேரங்களில் மிக கவனமாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், அவர்களின் உடைகள், உடலில் உள்ள தனித்துவமான அடையாளங்கள் (டேட்டூ), நகைகள் போன்றவற்றைக் கொண்டு காணாமல் போனவர்களின் தரவுப் பட்டியலோடு ஒப்பிட்டு மேட்ச் செய்யும் பணியை இவர் செய்து வருகிறார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சிதைந்த உடல்களைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைவதைத் தவிர்ப்பதற்காக, தானே அந்தப் புகைப்படங்களைச் சரிபார்ப்பதாகக் கூறும் சோனியா, சில அடையாளங்கள் தன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். காலில் பச்சை குத்தப்பட்டிருந்த ஒரு பூமாலை (டேட்டூ). இடது பக்க மூக்கில் அணிந்திருந்த ஒரு தங்க மூக்குத்தி. சேற்றில் புதைந்திருந்த ஒரு ஆரம்பப் பள்ளி மாணவனின் டை.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய சோனியா பாட்டீல், "நான் ஒரு குடும்ப உறுப்பினரை இழந்திருந்தால், அவர்களின் உடலை அந்த நிலையில் நேரில் காண்பதைத் தாங்கிக் கொள்ள முடியாது. என்னால் முடிந்த ஒரு சிறிய உதவியாக, துயரத்தில் இருக்கும் அந்த குடும்பங்களுக்குப் பயனுள்ள வகையில் மற்றொரு ஜோடி கண்களாக செயல்படுகிறேன்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தூர தேசத்தில் இருந்துகொண்டு, எந்தவித லாப நோக்கமும் இன்றி சோனியா பாட்டீல் மேற்கொண்டு வரும் இந்த மனிதநேயப் பணி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.