

காத்மாண்டு,
நேபாளத்தின் போடேகோஷி நதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் முற்றிலும் நாசமாகிவிட்டன. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள், சேறு, சகதி அனைத்தும் சுமார் 8 மாவட்டங்களை நிறைத்து இருக்கின்றன.
கிராமங்கள் மற்றும் நகரங்கள் என ஆற்றின் போக்கில் இருந்த பகுதிகள் அனைத்தும் சேறு சகதியால் நிறைந்து காணப்படுகின்றன. வரலாறு காணாத இந்த பேரிடரில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் துணையுடன் நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளின்போது அடுத்தடுத்து உயிரிழந்தோரின் உடல்கள் சிக்கி வருகின்றன. இதில் நேற்று வரை 1,222 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட உடல்கள் சிக்கி வருவதால் பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.
மீட்கப்பட்ட உடல்கள் பெரும்பாலும் உருக்குலைந்து காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே அவற்றுக்கு மரபணு சோதனை நடத்தி மொத்தமாக புதைக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் இந்த உடல்களை உறவினர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றின் புகைப்படங்களை நேபாள போலீசாரின் இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
இதுவரை கைப்பற்றப்பட்ட உடல்களில் வெறும் 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த 6,500-க்கு அதிகமா னோர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர். அதேநேரம் வெள்ளத்தில் மாயமானவர்களில் இன்னும் 4,858 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடு களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அடங்குவர்.
எனவே அவர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வரு கின்றன. இந்தப்பணிகளில் போலீசார், ராணுவ வீரர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் மாயமானவர்களை தேடுவதுடன், சேதமடைந்த சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளனர்.
பேரிடரில் சிக்கியவர்கள் தொடர்ந்து பிணமாக மீட்கப்படுவதும், மாயமான ஆயிரக்கணக்கானோரை பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பதும் நேபாளம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.