

இந்திய எல்லையை ஒட்டியுள்ள நேபாள பகுதியான தர்ச்சுலாவை சேர்ந்தவர் ஜெயசிங் தாமி (வயது 33). இவர் கடந்த ஜூலை 30-ந் தேதி இருநாட்டு எல்லை வழியாக பாயும் மகாகாளி நதியை கயிறு மூலம் கடக்க முயன்றுள்ளார். அப்போது கயிறு அறுந்து ஆற்றுக்குள் மூழ்கி அவர் இறந்ததாக தெரிகிறது. இந்திய பகுதிக்குள் நடந்த இந்த சம்பவத்தில், இந்தியாவின் எல்லை படையான எஸ்.எஸ்.பி.க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது தாமி கடந்த கயிறை எஸ்.எஸ்.பி. வீரர்கள் அறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜெயசிங் தாமி மறைவுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டி நேபாள தலைநகர் காட்மாண்டுவில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடந்தது. மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் நடத்திய இந்த போராட்டத்தில் மோடியின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டங்களுக்கு நேபாள அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியுள்ள நேபாள உள்துறை அமைச்சகம், அதை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.