ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல்: நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - வலுக்கும் எதிர்ப்பு

ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காத்மாண்டு,

நேபாளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (என்.சி.பி)வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அந்தக் கட்சியின் தலைவர் கே.பி. சர்மா ஒலி பிரதமரானார். முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தஹால் பிரசந்தா என்.சி.பி. கட்சியின் நிர்வாகக் குழு தலைவராக இருந்தார்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரதமர் ஒலி இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார்.

பிரதமர் ஒலியின் இந்த செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழு வன்மையாக கண்டித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடியாக மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து கே.பி. சர்மா ஒலி உடனடியாக பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலக வேண்டுமென பிரசந்தாவுக்கு ஆதரவான கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து, அண்டை நாட்டின் உதவியுடன் என் ஆட்சியைக் கலைக்கத் திட்டமிடுகிறார் என்று பிரசந்தா மீது பிரதமர் ஒலி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இது இரு தலைவர்கள் இடையிலான அதிகாரப் போட்டியை மேலும் வலுவாக்கியது.

இந்த நிலையில் பிரதமர் ஒலி தலைமையில் நேற்று காலை தலைநகர் காத்மாண்டுவில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் ஒலி நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்து அதற் கான ஒப்புதலை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்க கோரும் தனது பரிந்துரையை அதிபர் பித்யா தேவி பந்தாரிக்கு, அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக அதிபரை பிரதமர் ஒலி நேரிலும் சந்தித்துப் பேசினார். அதன்பின் பிரதமர் ஒலியின் பரிந்துரையை ஏற்று அதிபர் பந்தாரி, நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 30-ந்தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ந்தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து ஆளும் என்.சி.பி. கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயன்காஜி ஸ்ரீஸ்தா கூறுகையில், பிரதமர் ஒலியின் முடிவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது என சாடினார்.

என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசந்தா உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களும் பிரதமர் ஒலி இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்த உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பிரதமர் ஒலி, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுமாறு அதிபருக்குப் பரிந்துரைத்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அரசியலமைப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நேபாள அரசியலமைப்புச் சட்டப்படி, பிரதமருக்கு பெரும்பான்மை இருந்தால், நாடாளுமன்றத்தை கலைக்கப் பரிந்துரை செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஆட்சிக் காலம் முடியும் வரை பிரதமர்கள் மாறலாம், ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com