

காத்மாண்டு
நேபாள வெள்ளத்தில் சிக்கி ராணுவத்தினர் 45 பேர், போலீசார் 27 பேர் காணாமல் போயுள்ளனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் வடக்கே அமைந்துள்ளது ரசுவா மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில், லெண்டே கோலா ஆறும், பிற சிறிய ஆறுகளும் ஒன்றிணைந்து 'போடேகோஷி' ஆறாக கீழ்நோக்கி பாய்கின்றன.
இந்த ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன், காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் அருகில் உள்ள நுவாகோட் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன.
இதுதொடர்பாக நேபாள நாட்டின் பெருவெள்ளம் தொடர்பான பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இதுவரை வெள்ளத்தில் உயிரிழந்த 626 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 2,500 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்களில் நேபாள ராணுவத்தினர் 45 பேர், நேபாள போலீசார் 27 பேர், ஆயுத போலீஸ் படையினர் 13 பேர், சுங்க அலுவலக அதிகாரிகள் 15 பேர் மற்றும் குடியுரிமை அலுவலக அதிகாரிகள் 4 பேர் என மொத்தம் 104 பாதுகாப்பு மற்றும் அரசு அதிகாரிகளை பற்றிய விவரம் தெரிய வரவில்லை.
இந்நிலையில், 8,135 நேபாள போலீசார், 6,370 நேபாள ராணுவத்தினர் மற்றும் 4,203 ஆயுத போலீஸ் படையினர் என மொத்தம் 18,708 பாதுகாப்பு படையினர் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.