

புதுடெல்லி
பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று காலை அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் சென்றுள்ளனர்.
இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார். பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது 2-வது முறையாகும்.
இதன்பின்னர் நேற்று மாலை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த உரைக்குப்பின் பிரதமர் மோடிக்கு 'நெசெட் சபாநாயகர்' பதக்கம் வழங்கப்பட்டது. அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இதனை வழங்கினார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கம் பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் ஆகிய பெருமைகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
இதன்பின்பு, பிரதமர் மோடிக்கு நேற்றிரவு நெதன்யாகு இரவு விருந்து அளித்து கவுரவப்படுத்தினார். அப்போது, இந்தியாவின் பாரம்பரிய உடை அணிந்து பிரதமர் மோடியை வரவேற்று அவருக்கு ஆச்சரியம் ஏற்படுத்தினார்.
இதுபற்றி நெதன்யாகு, தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் இந்தியில் பதிவிட்ட செய்தியில், எங்களுடைய இரவு விருந்துக்கு முன்பு, இந்தியாவின் பாரம்பரிய உடையை அணிந்து என்னுடைய நண்பர் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்தினேன் என தெரிவித்து உள்ளார். இந்த பயணத்தில், அந்நாட்டின் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜோக்கையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசுகிறார். இஸ்ரேலில் அவர் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து அவர்களுடன் உரையாட உள்ளார்.