

லண்டன்,
கொரோனாவால் நிமோனியாவுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மருந்து பலன் அளிப்பதாக தி லேன்செட் சுவாச மருந்து பத்திரிகையில் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான ஆய்வை இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர்.
முடக்குவாத நோய்க்கு பயன்படுத்தப்படுகிற நமிலுமாப் என்ற ஆன்டிபாடி மருந்து (நோய் எதிர்ப்பு பொருள்) கொரோனாவால் ஏற்படுகிற நிமோனியாவில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுபற்றி பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான பென் பிஷர் கூறும்போது, கொரோனா வால் உண்டாகிற நிமோனியாவினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நமிலுமாப் வீக்கத்தைக் குறைக்கிறது என்பதற்கான முக்கிய ஆதாரத்தை எங்கள் ஆராய்ச்சி வழங்கி உள்ளது என தெரிவித்தார்.