சீனாவில் 10 நாட்களில் கட்டப்பட்ட புதிய ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களில் கட்டப்பட்ட புதிய ஆஸ்பத்திரி நேற்று திறக்கப்பட்டு மருத்துவ பணிகள் தொடங்கியுள்ளன.
சீனாவில் 10 நாட்களில் கட்டப்பட்ட புதிய ஆஸ்பத்திரி திறக்கப்பட்டது
Published on

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

அங்கு நேற்றைய நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்து விட்டது. புதிதாக 2,829 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டு உள்ளதால், இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 17,205 ஆக ஆதிகரித்து உள்ளது.

கொரோனா தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் 21,558 ஆக உயர்ந்து இருக்கிறது. இதைத்தவிர நோய் அறிகுறி இருக்கும் 1,52,700 பேரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை பெற்று வருபவர்களில் 2,296 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதேநேரம் இந்த வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றவர்களில் பலரும் உடல்நலம் தேறி வீடு திரும்பி வருகின்றனர். அப்படி இதுவரை 475 பேர் சிகிச்சை முடிந்து சென்றிருப்பதாகவும் சீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதில் 1000 படுக்கைகள் கொண்ட முதல் ஆஸ்பத்திரி நேற்று திறக்கப்பட்டது. ஹுவோஷென்ஷான் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆஸ்பத்திரி பல்துறை பணியாளர்கள் கொண்ட 7 ஆயிரம் பேர் அடங்கிய மிகப்பெரும் குழு மூலம் கடந்த 10 நாட்களாக 24 மணி நேரமும் பணியாற்றி உருவாக்கப்பட்டு உள்ளது.

60 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், 30 அவரச சிகிச்சை பிரிவுகள், சிறப்பு வெண்டிலேட்டர் கருவிகள் என நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வெளியே உள்ள மருத்துவ நிபுணர்களுடன் டாக்டர்கள் கலந்தாலோசிப்பதற்காக காணொலி காட்சி அரங்குகள் என சிறந்த தொழில்நுட்ப வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆஸ்பத்திரியில் தற்போது நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக தொடங்கப்பட்டு உள்ளன. இந்த ஆஸ்பத்திரியை தொடர்ந்து 1500 படுக்கைகள் கொண்ட மற்றொரு ஆஸ்பத்திரியும் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com