

ஒட்டாவா,
கொரோனா பாதிப்புகள் உலக நாடுகளில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியபடியே உள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை. அதன் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது, தடுப்பூசி போடுவது உள்ளிட்டவை அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கனடா நாட்டின் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களில் இருந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்படி, தாவரத்தில் இருந்து தயாரான தடுப்பூசியை வயது வந்த 24,141 நபர்களுக்கு 85 மையங்களில் வைத்து செலுத்தி பரிசோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு 2 முறை தடுப்பூசி போடப்பட்டது.
இதில், ஆய்வில் பங்கேற்ற 165 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. நியூஇங்கிலாந்து மருத்துவ செய்தி இதழில் வெளியான இந்த ஆய்வு தகவலின்படி, கொரோனாவின் 5 வகைகளில் இருந்து ஏற்பட்ட அறிகுறிகளுடன் கூடிய தொற்றுக்கு எதிராக இந்த தாவரம் சார்ந்த தடுப்பூசி 69.5 சதவீதம் திறன் கொண்டது என தெரிய வந்துள்ளது.
இதேபோன்று, மித அளவில் இருந்து கடுமையான நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் தடுப்பூசி 78.8 சதவீதம் திறனுடன் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனால், அறிகுறிகளுடன் கூடிய தொற்று ஏற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி 69.5 சதவீதமும், மித அளவில் இருந்து கடுமையான நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் தடுப்பூசி 78.8 சதவீதம் திறனுடன் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.