

ஜனாதிபதி தேர்தல்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நைஜர். இந்த நாடு, ஐ.நா. சபையின் 189 நாடுகளின் வளர்ச்சி தரவரிசைப்படி உலகின் மிக ஏழ்மையான நாடு ஆகும்.இந்த நாடு, 2010-ம் ஆண்டை தொடர்ந்து 4 முறை ராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதித்திட்டங்களை கண்டுள்ளது.1960-ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து நைஜர் சுதந்திரம் அடைந்த பின்னர் தேர்தல் மூலம் முதல் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.இதில் நைஜீரிய ஜனநாயக சோசலிஸ்டு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முகமது பசூம் 55.67 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு உறுதி செய்தது.
எதிர் வேட்பாளர் ஏற்கவில்லை
ஆனால் தேர்தல் முடிவை முகமது பசூமை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக குடியரசு புதுப்பிப்பு கட்சி வேட்பாளர் மகமானே ஊஸ்மானே ஏற்கவில்லை. ஆனாலும் நைஜர் நாட்டின் புதிய ஜனாபதிபதியாக முகமது பசூம் வெள்ளிக்கிழமை பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கிடையே ஊஸ்மானே, அவரது பதவி ஏற்புக்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான முறையில் பேரணிகள் நடத்துமாறு தனது ஆதரவாளர்களை கேட்டிருந்தார். ஆனால் அதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் அங்கு ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்துவதற்கு, ஜனாதிபதி மாளிகையையொட்டி ராணுவத்தில் ஒரு பிரிவினர் துப்பாக்கிச்சூடு நடத்தி முயற்சித்தனர். உடனே அங்கிருந்த ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். மேலும் அவர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றி, ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் முறியடித்தனர்.இதுபற்றி அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, அதிகாலை 3 மணி இருக்கும். அப்போது ஜனாதிபதி மாளிகை மற்றும்
அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. 15 நிமிடங்கள் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்ந்தது என்றார்.அதிகாலை 4 மணிக்குத்தான் அங்கு அமைதி திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
கட்டுக்குள் நிலைமை...
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த முயற்சி குறித்து அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் அப்துர் ரகுமானே ஜகாரியா கருத்து தெரிவிக்கையில், இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது என குறிப்பிட்டார்.இந்த முயற்சிக்கு பின்னர் தற்போது பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.