நைஜீரியா: வெள்ள பாதிப்புக்கு 151 பேர் பலி


நைஜீரியா:  வெள்ள பாதிப்புக்கு 151 பேர் பலி
x

நைஜீரியாவின் மொக்வா நகரில் வெள்ளநீர் சூழ்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

அபுஜா,

நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா நகரில் இருந்து மேற்கே 380 கி.மீ. தொலைவில் மொக்வா என்ற நகரம் உள்ளது. வடக்கு மத்திய பகுதியில் நைஜர் மாகாணத்திற்கு உட்பட்ட இந்த நகர், முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நகரங்களுக்கு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வார்கள்.

இவற்றை நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வரும் வர்த்தகர்கள் வாங்கி செல்வார்கள். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இதில் சிக்கி 151 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் காயமடைந்து உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். தொடர் மழையால், பொதுமக்களின் இடுப்பு வரை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஏறக்குறைய 5 மணிநேரத்தில், வெள்ளம் அதிகரித்து 500-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால், மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 2 சாலைகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. 2 பாலங்கள் உடைந்துள்ளன. இதனை தொடர்ந்து ஜனாதிபதி போலா தினுபு, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், நிவாரண பொருட்களையும், தற்காலிக புகலிடம் வழங்கும் உதவியையும் காலதாமதமின்றி உடனடியாக செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

1 More update

Next Story