

அபுஜா,
நைஜீரியாவில் கிராமத்திற்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் நடத்திய கொடூர தாக்குதலில் 62 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன
அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் பண்டிட்ஸ் என்ற ஆயுத கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் டராபா மாகாணத்தில் பின்னாரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் நேற்று புகுந்த பண்டிட்ஸ் ஆயுதக்குழுவினர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மேலும், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல் நடத்தினர். கிராம மக்களின் வீடுகளை தீ வைத்து எரிந்த ஆயுதக்குழுவினர், உணவு பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 62 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற ஆயுதக்குழுவினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.