நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி - போகோஹரம் பயங்கரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியாவில் நடந்த மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி - போகோஹரம் பயங்கரவாதிகள் அட்டூழியம்
Published on

அபுஜா,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கில் போகோஹரம் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள், போலீசார் மற்றும் ராணுவவீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

மேலும் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் கிராமங்களுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, வீடுகளை சூறையாடி, பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரையும் ஈவு இரக்கம் இன்றி கொன்று குவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

பயங்கரவாதிகளின் இந்ந கொடூர தாக்குதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பிறநாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

போகோஹரம் பயங்கரவாதிகளை ஒடுக்குவது ராணுவவீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் போர்னோ மாகாணத்தின் தலைநகர் மயிடுகுரியில், கொடுங்கா என்ற இடத்தில் உள்ள பெரிய அரங்கத்தில் தொலைக்காட்சி மூலம் கால்பந்து போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் அரங்கத்தில் திரண்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அரங்கத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர், தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.

அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. என்ன நடக்கிறது என மக்கள் சுதாரிப்பதற்குள் மேலும் 2 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் அடுத்தடுத்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அரங்கத்தில் இருந்த அனைவரும் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தொடர் குண்டு வெடிப்பில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.

மேலும் 40 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு போகோஹரம் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com