அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனை இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலிக்கு ‘கேபினட்’ அந்தஸ்து

அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலிக்கு, கேபினட் அந்தஸ்து கிடைத்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் புதிய சாதனை இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலிக்கு ‘கேபினட்’ அந்தஸ்து
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க வரலாற்றில் முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நிக்கி ஹாலிக்கு, கேபினட் அந்தஸ்து கிடைத்துள்ளது. அவர் ஐ.நா. சபைக்கான தூதராக நியமிக்கப்பட்டதற்கு செனட் சபை அங்கீகாரம் அளித்தது.

டிரம்ப் நியமனம்

அமெரிக்க நாட்டில், தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னராக இரண்டாவது முறையாக பதவி வகித்து வந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், நிக்கி ஹாலி (வயது 45). இவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்.

ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரை நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரில் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து பல்வேறு யூகங்கள் எழுந்தன. டிரம்ப் அரசில் அவர் வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அவரை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் தேர்வு செய்தார்.

செனட் சபை அங்கீகாரம்

நிக்கி ஹாலியை ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக டிரம்ப் நியமனம் செய்ததை, அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை நேற்று அங்கீகரித்தது. அவருடைய நியமனத்துக்கு ஆதரவாக 96 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 4 வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இந்திய வம்சாவளி ஒருவர், அமெரிக்க வரலாற்றில் கேபினட் மந்திரி அந்தஸ்து பதவி பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் நிக்கி ஹாலி சரித்திர சாதனை படைத்துள்ளார்.

பாராட்டுகள் குவிகின்றன

அவரது நியமனத்துக்கு செனட் சபை அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து அவர் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். அதிவிரைவில் அவர் ஐ.நா. சபையில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அவருக்கு உலகளாவிய விவகாரங்களில் அனுபவம் இருக்கிறதா என்ற கேள்வியை ஜனநாயக கட்சி முதலில் எழுப்பியது. ஆனால் அவரது நியமனத்தை உறுதி செய்வதற்கான விவாதத்தின்போது, அவர் ரஷிய விவகாரம், இஸ்ரேல் மீதான ஐ.நா. நடவடிக்கைகளை கையாண்ட விதம், பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

நிக்கி ஹாலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெளியுறவு கமிட்டியின் குடியரசு கட்சி தலைவர் பாப் கார்க்கர் எம்.பி., ஹாலி, நிரூபிக்கப்பட்ட தலைவர் ஆவார். அவர் ஐ.நா. சபையில் அமெரிக்க நலன்களுக்காக திறமையுடன் வாதாடுவார் என குறிப்பிட்டார்.

டிரம்ப் புகழாரம்

நிக்கி ஹாலியை ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக நியமனம் செய்தபோது டிரம்ப், கவர்னர் நிக்கி ஹேலி தனது மாகாணம் மற்றும் நாட்டின் நன்மைக்காக, மக்களை அவர்களின் பின்னணி, கட்சியைப் பார்க்காமல் ஒன்றுபடுத்தி சாதித்துக்காட்டியவர். அவர் விவகாரங்களை கையாள்வதில் தனது ஆற்றலை நிரூபித்துக்காட்டியவர். உலக அரங்கில் அவர் அமெரிக்காவின் பிரதிநிதியாக, மாபெரும் தலைவராக விளங்குவார் என புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

நிக்கி ஹாலி ஏற்கனவே, அமெரிக்க மாகாணம் ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் கவர்னர் என்ற சாதனையை படைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

குடும்பம்

இவருடைய பூர்விகம், பஞ்சாப் மாநிலம் ஆகும். இவரது கணவர் மைக்கேல் ஹாலி. இவர் ராணுவ அதிகாரி ஆவார். இந்த தம்பதியருக்கு ரேனா, நலின் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் பிறப்பால் சீக்கியர், திருமணத்தால் கிறிஸ்தவர். தன்னை அவர் இன்றளவும் சீக்கியராகவும், கிறிஸ்தவராகவும் அடையாளப்படுத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com