

லண்டன்,
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி முற்றியதும் வெளிநாட்டுக்கு தப்பினார்.
இந்தியா விடுத்த வேண்டுகோள்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். லண்டன் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து 5 தடவை அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரி இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதுதொடர்பான வழக்கு விசாரணை, மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸ் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை உறுதிப்படுத்த மட்டுமே அவர் பேசினார்.
அப்போது, நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்று நீதிபதி அறிவித்தார்.
ஆனால், தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விசாரணையை நடத்துவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். பின்னர், இறுதி விசாரணைக்கு முன்பு, 7-ந்தேதி, வக்கீல்களை மட்டும் வைத்து ஒத்திகை நடத்துவது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இறுதி விசாரணையில், நிரவ் மோடியை நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிடுவேன் என்றும், அதற்கு நிர்வாகம் சம்மதிக்காவிட்டால், அவர் வீடியோ இணைப்பு மூலம் பங்கேற்கலாம் என்றும் நீதிபதி கூறினார். கூடுதல் ஆதாரங்களை 4-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இறுதி விசாரணையில், குறைவான வக்கீல்கள் மட்டும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.