லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும் நிரவ் மோடி - வைர வியாபாரத்தில் ஈடுபடுவதும் அம்பலம்

ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிரபல தொழில் அதிபர் நிரவ் மோடி, லண்டனில் சொகுசாக வாழ்ந்து வருவது அம்பலமாகி இருக்கிறது.
லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும் நிரவ் மோடி - வைர வியாபாரத்தில் ஈடுபடுவதும் அம்பலம்
Published on

லண்டன்,

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடி தொடர்பான விசாரணை தொடங்குவதற்கு முன்பே நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

எனவே நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர். நிரவ் மோடியை பார்த்தால் கைது செய்து ஒப்படைக்குமாறு அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு நிரவ் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் தேடுதல் வேட்டை நடந்து வரும் நிலையில், அவர் லண்டனில் மிகவும் சுதந்திரமாக சுற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதையும் தி டெலிகிராப் பத்திரிகை செய்தியாக வெளியிட்டு உள்ளது.

குறிப்பாக, லண்டனின் மேற்கு முனை பகுதியில் உள்ள சுமார் ரூ.75 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 படுக்கை வசதி கொண்ட வீட்டில் அவர் வசித்து வருகிறார். அதன் வாடகையே மாதத்துக்கு சுமார் ரூ.15 லட்சம் ஆகும். இவ்வாறு சொகுசாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரும் நிரவ் மோடி, லண்டனில் வைர வியாபாரமும் செய்து வருவதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

அத்துடன் நிரவ் மோடியின் வீடியோ பதிவு ஒன்றையும் அந்த பத்திரிகை வெளியிட்டு இருந்தது. அதில் அவரிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து டெலிகிராப் பத்திரிகை நிருபர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் சாரி நோ கமென்ட்ஸ் என்று மட்டுமே சொல்லிக்கொண்டு சென்று விட்டார்.

அந்த வீடியோவில், ஊதா கலர் சட்டையும், அதற்கு மேல் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த ஜாக்கெட்டும் அணிந்து, முறுக்கு மீசை, தாடியுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு நிரவ் மோடி காணப்பட்டார். வங்கி மோசடியில் சிக்குமுன் மீசை, தாடி இல்லாத முகமே அவரது அடையாளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நிரவ் மோடியின் வங்கிக்கணக்கு எல்லாம் முடக்கப்பட்டு, அவருக்கு எதிராக சர்வதேச போலீசாரே தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்த பிறகும், அவர் இத்தகைய சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குறைகூறியுள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், முதலில் நீங்கள் வங்கிகளில் இருந்து ரூ.23 ஆயிரம் கோடியை கொள்ளையடியுங்கள். பின்னர் எந்த சோதனையும் இன்றி நாட்டை விட்டு வெளியேறி ரூ.75 கோடி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி வசதியாக வாழுங்கள். (நரேந்திர) மோடி இருப்பதால் எல்லாம் சாத்தியமாகும் என்று கிண்டலாக தெரிவித்தார்.

பல்வேறு தொழிலதிபர்கள் இந்திய வங்கிகளில் இருந்து ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு தப்பி ஓடியிருப்பதாகவும், ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒருவரை கூட மத்திய அரசு பிடிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். வங்கி மோசடியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் நிறுவனத்தையே பிரதமர் மோடி நடத்தி வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com