அணு ஆயுத சோதனை இனிமேல் நடத்த மாட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதி

அணு ஆயுத சோதனை இனிமேல் நடத்த மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #NorthKorea
அணு ஆயுத சோதனை இனிமேல் நடத்த மாட்டோம்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உறுதி
Published on

சியோல்,

உலக நாடுகளை தனது அணு ஆயுத சோதனைகள் மூலம் அதிர வைத்துக்கொண்டிருப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வார்த்தை யுத்தங்களையும் அணு ஆயுத சோதனை கண்டம் கண்டம் விட்டு பாயக்கூடிய ஏவுகணை சோதனை ஆகியவற்றை நடத்தி வடகொரியா அடாவடியில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியாவின் கொட்டத்தை அடக்கும் முயற்சியாக, அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது.

ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது. இரு நாட்டுத்தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். அதுமட்டுமின்றி, வடகொரியாவுக்காக அமெரிக்காவிடம் தென்கொரியா பரிந்து பேசியது.

அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார். அதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வரும் மே அல்லது ஜூன் மாத துவக்கத்தில் இந்த சந்திப்பு நிகழக்கூடும் என தெரிகிறது.

இந்த நிலையில், அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலையில், அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது சர்வதேச அளவில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com