லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

இந்த பேச்சுவார்த்தைக்கு, லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லை:  இஸ்ரேல் அறிவிப்பு
Published on

டெல் அவிவ்

இஸ்ரேல் ராணுவ தளபதி இயால் ஜமீர், ஹைபா நகரிலுள்ள கடற்படை தளத்திற்கு சென்றார். போருக்கான விசயங்களை பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமெரிக்கா தலைமையிலான 4-வது சுற்று பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடந்து வரும் சூழலில், அவர் இதனை கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு, லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஈரானின் வெளியுறவு துறை மந்திரி அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான தொடர்பு தொடர்ந்து தடையற்ற வகையிலேயே இருக்கிறது என கூறியுள்ள நிலையில், ஜமீர் இதனை கூறியுள்ளார். இதனால், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தொடரும் என அஞ்சப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. வளைகுடா நாடுகளில் உள்ள தளங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடந்தது என கூறப்படுகிறது. இதனால், குவைத், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதும் கடந்த காலங்களில் ஈரான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ஈரான் நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், லெபனானை இஸ்ரேல் தாக்கியது. அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த சூழலில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்குள் இஸ்ரேல் படைகள் நுழையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் கூறினார். இரு நாடுகளும், பரஸ்பர பகைமைகளை தவிர்த்து விடும் என்றும் இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வார்கள் என்றும் கூறினார். ஆனால், நெதன்யாகுவோ படைகளை தாக்குதல் நடத்த தயாராக இருக்க உத்தரவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com